உலகம்

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலியா !


ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த மாநிலத்தின் டவுன்ஸ்வில்லே நகரத்தில் கடந்த ஏழு நாட்களில் 100 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,012 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், அங்குள்ள ராஸ் ஏரி மற்றும் பல்வேறு அணைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ராஸ் அணையானது முழு கொள்ளளவை எட்டி விட்டதால் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து டவுன்ஸ்வில்லே பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறக்கோரி பேரிடர் மீட்புக் குழுவினர் முகநூல் வாயிலாக அறிவுறுத்தியுள்ளனர். தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் விளை நிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே கனமழையால் வெள்ளத்தில் அடித்து வரப்படும் முதலைகள், பாம்புகள் போன்ற விஷ ‌ஜந்துகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். முதலைகளை பிடிக்க ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here