அரசியல்

அகிலேஷ்-மாயாவதி நிலைப்பாட்டை மாற்றுவாரா பிரியங்கா காந்தி?


காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்புள்ள பிரியங்கா காந்தி, காங்கிரஸை தவிர்த்துவிட்டு போட்டியிட வேண்டும் என்ற அகிலேஷ்-மாயாவதியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வியூகங்கள் பற்றிய செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதன்படி அம்மாநிலத்திலுள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தன. 

            

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்திய பின் அகிலேஷ் அதனை வழிமொழிந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள ராகுல் மற்றும் சோனியாவின் அமேதி, ரபேலி தொகுதிகளில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்ற பின்னர் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று உத்தரப் பிரதேச பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரியங்கா காந்தியின் வருகைக்காக லக்னோவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மண்டல காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

            

இதனிடையே, பிரியங்கா காந்தியின் இந்த வருகையை அடுத்து உத்தரப் பிரதேச அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. ஏனெனில் காங்கிரஸை தவிர்த்துவிட்டு போட்டியிட்டால் சில இடங்களில் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சமாஜ்வாடி தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

இதுகுறித்து பெயர் சொல்லவிரும்பாத சமாஜ்வாடி தலைவர் ஒருவர் கூறுகையில், “பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உடன் காங்கிரஸ் கட்சி எப்படி பேச்சுவார்த்தை நடத்துவதை பொறுத்துதான் உள்ளது. மாயாவதி உடன்பாட்டிற்கு வந்துவிட்டால் என்றால், காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் அகிலேஷ் எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தமாட்டார்” என்றார்.

               

அதனால், மாயாவதியுடன் பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. காங்கிரஸ் கட்சி 12 இடங்களுக்கு மேல் கேட்பதே பிரச்னையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பிரியங்கா காந்தி எடுக்கு முயற்சிகள் பலன் அளிக்கும் பட்சத்தில் பிரியங்கா-அகிலேஷ்-மாயாவதி கூட்டணி பாஜகவுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது. Source link

Comment here