அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல்: தனித்து போட்டியிட தயாராகிறதா அதிமுக..?


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 40 தொகுதிகளிலும் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து களம் காண தயாராகி விட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தின் இரண்டு பெரிய பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக உள்ளன. திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதேசமயம் ஆளும் அதிமுக சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கப் போகிறதா..? அல்லது பாஜகவுடன் கைகோர்க்க போகிறதா..? இரண்டும் இல்லாமல் தனித்து களம் காண உள்ளதா..? என்பது தான் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்.

பொதுவாகவே மத்திய பாஜக அரசுடன் அதிமுக அரசு இணக்கமான நிலையை கடைபிடித்து வருவதால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்ற கருத்துகள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நிலவி வந்தன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது. பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே  அதிமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23-ம் தேதி அதிமுக அறிவித்தது. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக விருப்ப மனுக்களை பெற அதிமுக தயாராகி விட்டது. அதேசமயம் பெரிய அளவில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி என்ற பேச்சு இல்லாமல் தற்போது தேர்தல் வேளைகளில் அதிமுக தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன்மூலம் அதிமுக வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாராகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் கண்டு தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றிக் கண்டது. அப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார். பரப்புரைக்கு சென்று அனல் பறக்க வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். ஆனால் தற்போது ஜெயலலிதா மறைவு அதிமுகவிற்கு சற்று பின்னடைவாக கருதப்பட்டாலும் அதிமுகவின் தற்போதையை நடவடிக்கைகள் தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயாராகி விட்டது என்பதை காட்டும் வகையிலேயே உள்ளது.Source link

Comment here