அரசியல்

10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வி.சி.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு – திருமாவளவன்


10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தல் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்காகப் போராடி உயி‌ர்நீத்த முத்துக்குமாரின் ‌நினைவுநாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.  “10 சதவிகித இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. வறுமையில் உள்ளவர்களுக்கு அல்லது பொருளாதாரா ரீதியில் நலிந்தவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதாக சொன்னாலும் இந்தச் சட்டம் பட்டியல் இனத்தவர்களுக்கு பொருந்தாது என்று சொல்வதன் மூலம் அரசாங்கமே தீண்டாமையை கடைபிடிக்கிறது. ஆகவே இது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்ற வகையில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.” என திருமாவளவன் தெரிவித்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here