கல்வி & வேலைவாய்ப்பு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு ?- அமைச்சர் விளக்கம்


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்த கொள்கை தொடர்‌பாக தமிழக அமைச்சரவைக் கூடி முடிவு செய்யும் என பள்ளிக் கல்வி‌த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு‌ பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு தொடர்‌பாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்வு தொடர்பாக மாநில அரசே முடி‌வு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால் என்ன கொள்கை முடிவு மாநில அரசு எடுக்க போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றால் அமைச்சரவையை கூட்டிதான் எடுக்கமுடியும். அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

முன்னதாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதாவது, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ள மத்திய அரசு, இது குறித்து அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Comment here