சினிமா

‘ஏ.கே. 59’க்கு போட்டியாக களமிறங்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ – வெளியீடு தேதி அறிவிப்பு


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பேசும் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும் விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்கின்றனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, ராதிகா, மொட்டை ராஜேந்திரன், நாராயண் லக்கி, ஆர்.ஜே. பாலாஜி, சதீஸ் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி அன்று கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே மே 1 ஆம் தேதியான அஜித்தின் பிறந்தநாள் அன்று போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் ‘ஏ.கே.59’ படம் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் ‘ஏ.கே.59’ இது. இதனால் பேட்ட, விஸ்வாசம் போன்று ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் ‘ஏ.கே.59’ படமும் போட்டியாக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 Source link

Comment here