வாட்ஸ் அப் தகவல்கள் – தனிநபரின் கடமைகள்

வாட்ஸ் அப் இல்லாமல் இன்று வாழ்க்கை இல்லை. உலக அளவில் ஒரு செய்தியை நொடிப் பொழுதில் கொண்டு சேர்ப்பதில் இந்த ஊடகம்தான் முதல் இடம் வகிக்கிறது. எந்த அளவுக்கு வேகமாக செய்தி போகிறதோ அதே வேகத்தில் இதனால் பிரச்னையும் வந்து சேர்கிறது. ஆகவேதான் வாட்ஸ் அப் ஊடகத்திற்கு ஏதாவது ஒருவழியில் ‘கடிவாளம்’ போட வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் கொழுந்துவிட்டு எழத் தொடங்கி உள்ளன. ‘வாட்ஸ் அப்’ பற்றிய விவாதங்கள் முற்று பெறாமல் இன்றும் தொடர்வதற்கு அதன் கட்டற்ற சுதந்தரமே காரணம். 

இந்தச் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பான ஒரு வழக்கில்,  “வாட்ஸ் அப்” செயலி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கவில்லை, இந்திய சட்டங்களுக்கு “வாட்ஸ் அப்” நிறுவனம் கட்டுப்படுவதில்லை என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. 

            

கடந்த மாதம் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் தலைவர் கிரைஸ் டேனியலை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் கிரைஸ் டேனியலிடம் வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவது, பொய்யான செய்திகளை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இந்நிலையில், வாட்ஸ்அப் வாடிக்கையாளர் குறைகளை கேட்பதற்காக கோமல் லஹரி என்பவரை வாட்ஸ் அப் நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயணாளிகள் இமெயில் மூலம், வாட்ஸ் அப் செயலி மூலம் தங்களின் குறைகளை கோமல் லஹரிக்கு தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்கின்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோமல் லஹரி இந்தியாவில் இல்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும், குறைகேட்பு அதிகாரியை நியமித்தது ஒரு முக்கிய நிகழ்வு. 

                 

அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வருவதால், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மீது கடுமையான நிலைப்பாட்டையும், கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் கோமல் லஹரி அவர்களின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. அரசும் அரசு சார்த்த நிறுவனங்களும் தங்களது குடிமக்களைக் கண்காணிப்பது சரியா? தவறா? என்பது ஒரு நீண்ட விவாதம். தவறான தகவல்களை பரப்பும் சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதும், சட்டஒழுங்கைப் பாதுகாப்பதுவும் அரசின் தலையாய கடமைகளில் ஒன்று. 

வாட்ஸ்அப் நிறுவனம் குறைகேட்பு அதிகாரியை நியமித்த பின்பு வெளியிட்ட குறிப்பு ஒன்றில், குற்ற விசாரணைக்காக வாட்ஸ்அப் நிறுவனத்தில் அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் விடுக்கும் வேண்டுகோள்கள் அடிப்படையில் 90 நாட்கள் வரை உபயோகிப்பாளர்களின் தகவல்கள் சேமிக்க முயற்சி எடுக்கப்படும் என்கிற அறிவிப்பு முதன்மையானது. சட்டஒழுங்கு தொடர்பான சூழ்நிலைகளில், அதி அவசரமாகத் தகவல்களை அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் பெற்றுக்கொள்வதற்கு வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

          

 தனிமனித உரிமைகள் மற்றும் அரசின் கடமைகள் என்கின்ற இரு பெரும் தலைப்புகளில், அரசின் கண்காணிப்பு வளையம், அரசின் கொள்கை நிலைப்பாடுகள், அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் அமைப்புசாரா தனிநபர்கள் என்று இந்த வாதங்களின் நீள அகலங்கள் மிகப்பெரியவை. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தனிமனித சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் தலையாய கடமை. அதேநேரத்தில் சட்டஒழுங்கைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது அரசின் முழுமுதல் கடமை.

இவையெல்லாம் தாண்டி, “மெய்பொருள் காண்பதறிவு” என்கின்ற வள்ளுவரின் வாய்மொழியில், “வாட்ஸ் அப்” மற்றும் சமூக வலைத்தளங்களை உபயோகப்படுத்தும் தனிநபர்களின் ஒத்துழைப்பு மிக இன்றியமையாதது. “வாட்ஸ் அப்” உபயோகிப்பாளர்கள் தாங்கள் பெரும் தகவல்களை ஒன்றிற்கு இரண்டு முறை சிந்தித்து அடுத்தவரிடம் பகிர்ந்துகொண்டாலே, சரியான/உறுதியான  தகவல்கள் மட்டுமே பகிரப்பட்டு, தொழிநுட்பத்தின் உண்மையான பலன்களை சமூகம் அடையமுடியும்.

கணபதி,  

தகவல் தொழில்நுட்ப நிபுணர்  


Source link

Check Also

"இன்னும் மூன்று ஆண்டுகளில் 5ஜி"

இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *