அரசு வேலைக்கு காத்திருக்கும் 24 லட்சம் இன்ஜினீயர்கள்

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 24 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை முக்கியமான பிரச்னையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014 மக்களவை தேர்தலில் அளித்த வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக அரசு மறுத்து வருகிறது. நேரடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை காட்டிலும், தொழில் முனைவோர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

                  

இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி பதிவு செய்துள்ளவர்களின் தகவல்கள் இவை:

           

மொத்தம் பதிவு செய்துள்ளவர்கள் – 79 லட்சத்து 62 ஆயிரத்து 826 பேர்

வயது வாரியாக:-

18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் – 20.90 லட்சம் பேர்
18-23 வயதினரான கல்லூரி மாணவ, மாணவிகள் –  20.20 லட்சம் பேர்
24-35 வயதினரான கல்லூரி மாணவ, மாணவிகள் –  27.08 லட்சம் பேர்
36-56 வயதுடையவர்கள்                          –  11.36 லட்சம் பேர்
57 வயதுக்கு மேற்பட்டவர்கள்                    –  6,440 பேர்

மாற்றுத் திறனாளிகள்                           –  98,709 பேர்
பார்வையற்றவர்கள்                             – 15,225 பேர்
வாய் பேசாதோர்                                – 13,672 பேர்
 
பாட வாரியாக:-

கலை பட்டதாரிகள் – 4.29 லட்சம் பேர் 
அறிவியல் பட்டதாரிகள் – 5.62 லட்சம்
வணிகவியல் பட்டதாரிகள் – 2.96 லட்சம் பேர்
பொறியியல் பட்டதாரிகள்  – 24 லட்சம் 
வேளாண் பட்டதாரிகள்    – 6,216

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இது தவிர, தொழில்திறன் இல்லாதோர், தொழில்நுட்ப பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் சென்னையில் உள்ளன.

பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தொழில் படிப்புகள் மற்றும் முதுகலை கல்வித் தகுதிகளை இருப்பிட முகவரிக்கு ஏற்ப சென்னை அல்லது மதுரையில் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால்தான் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அமலில் இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source link

Check Also

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

முதல்வர், துணை இயக்குநர் மற்றும் துணை இன்ஜினியர் ஆகிய பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *